முதல் (II class) இரயில் பயணத்திற்கு தமிழில் வழிகாட்டி...
ஊக்கம்: முகமூடியின் இப்பதிவு மட்டுமே!!!
இது இந்தியாவை (சென்னையிலிருந்து கிளம்பும் இரயில்களை!) மனதில் வைத்து மட்டுமே எழுதப்பட்டது. இரயிலில் கரன்ஸி, பர்ஸ் மற்றும் உடைமைகளுக்கு நீங்களே பொறுப்பு ! (இரயிலின் படங்கள் வேண்டுபவர்கள் எனக்கு ஒரு வரி மின்னஞ்சல் அனுப்புங்கள்...)
முன்னேற்பாடு
* உங்கள் லக்கேஜின் எடை பற்றியெல்லாம் கவலை வேண்டாம் (உங்களால் அதை தூக்கிக் கொண்டு செல்ல முடியுமா என்பது தவிர !!!)
* நெடுந்தூர பயணம் என்றால், இரயிலில் சாப்பிட புளிசாதம், இட்லி, சப்பாத்தி என்று வகையாக (சீக்கிரம் ஊசிப் போகாத அயிட்டங்களாக!) சாப்பாடு கட்டி எடுத்துக் கொள்ளுங்கள். வழியில் வரும் ரயில் நிலையங்களில் கிடைக்கும் உணவை உண்டால் வயிறு புடுங்கிக் கொள்ளலாம் !!!
* இரயில் டிக்கெட், போர்வை, சோப்பு, சீப்பு, செயின், பஞ்சு (காது ப்ராப்ளம் இருந்தால்!) வகையறாக்கள்
* தண்ணீர் --- குடிக்க வாங்கிக் கொள்ளலாம், ஆனால், நெடுந்தூர பயணம் என்றால், இரயிலில் ஏறிய அடுத்த நாள் கழிவரையில் தண்ணீர் வராது. எனவே ...... (பேப்பரே ஓகே என்றால் உங்கள் இஷ்டம் !!!)
* ஆட்டோக்காரருடன் மல்லு கட்ட வேண்டிய (மனித / லக்கேஜ் கட்டணம் ...) சூழ்நிலைக்கான சாத்தியம் அதிகம் இருப்பதால், இரயில் நிலையம் செல்ல சற்று முன்னதாகவே கிளம்பவும் !
* ரொம்ப தாமதமாக கிளம்பினாலும், ஆட்டோக்காரரிடம் இரயில் புறப்படும் நேரத்தைக் கூறி, ஒரு பத்து ரூபாய் எக்ஸ்டிரா தருவதாக கூறி விட்டால், எப்பாடு பட்டாவது உங்களை இரயில் புறப்படும் முன்பாக, நிலையத்தில் சேர்த்து விடுவார், ஆனால், சேரும்வரை அவர் ரோடு மேல் செய்யும் சாகசங்களைக் கண்டு, உங்களுக்கு நாக்கு வெளியே தள்ளி விடும் என்பது ஒரு சின்ன எச்சரிக்கை !!!
* இரயில் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது 3 நிமிடங்கள்(!) முன்பாக இரயில் நிலையத்தில் இருப்பது நலம் !!!
இரயில் நிலையத்தில்
* உங்கள் லக்கேஜ் அதிக எடை இருந்தால், இரயில்வே அலுவலர் கண்ணில் படாமல், போர்ட்டரை வைத்து இரண்டு டிரிப் அடித்து, இரயிலில் லக்கேஜை (இருக்கைகளுக்கு கீழே!) நைசாக ஏற்றி விடுங்கள். மாட்டினால், தண்டம் அழ வேண்டி வரும்.
* இரயில் நிலையத்தில் எஸ்கலேட்டரும் கிடையாது, தள்ளுவண்டியும் கிடைக்காது !(போர்ட்டர்களின் கட்டுப்பாட்டுக்குள் தான் அவை இருக்கும்!)
* பட்டாஸ் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது !!! TTE யிடம் மாட்டினால், டின் கட்டப்படுவது நிச்சயம் !!!
* தலைவலி மாத்திரை கைவசம் வைத்திருங்கள். ஏதாவது அறுவையான சகபயணி மாட்டினால் உபயோகமாக இருக்கும் !
* நிலையத்தில் ஜாலியாக தம் அடித்து விட்டு, வண்டி புறப்பட்டவுடன், ஓடிப்போய் (ஸ்டைலாக) ஏற முயற்சிக்காதீர்கள் ! வழுக்கி தண்டவாளத்தில் விழுந்தால், சிவலோக பதவி நிச்சயம் !!!
* சரக்கு அடித்து விட்டு இரயிலில் ஏறுங்கள். சரக்கோடு ஏறினால், இரயில்வே போலிஸிடம் மாட்டுவது நிச்சயம் !
இரயிலில்
* இரவு இரயில் என்றால், TTE வருவதற்கு முன்பே, உங்கள் பெர்த்தில் ஏறி தூங்காதீர்கள். அவர் உங்களை எழுப்பி உங்கள் டிக்கெட்டை எப்படியும் பரிசோதிப்பார். கொஞ்சம் கடுப்பும் அடிப்பார் !!!
* இரயிலில் ஏறியவுடன் லுங்கி அல்லது பெர்முடாஸ¤க்கு மாறி விட்டால், வீட்டில் தூங்குவது போலவே தூங்கலாம்.
* உங்கள் லக்கேஜை, நீங்கள் எடுத்துச் சென்ற செயினை (சங்கிலி) வைத்து, இருக்கையுடன் இணைத்து பூட்டி விடுங்கள். இல்லையேல், நிம்மதியாக உறங்க முடியாது.
* நல்ல ஷ¥க்கள் போட்டிருந்தால், அவற்றை பெர்த்தில் தலைக்கு மேல் வைத்துக் கொள்ளுங்கள் !!! இல்லையேல், அவை லவட்டப்படும்.
* எதுவும் இலவசமாகக் கிடைக்காது ! ஆனால், சில நல்லவர்கள், பிஸ்கட் இலவசமாக தரக்கூடும். அதை வாங்கி சாப்பிட்டால், ஆசுபத்திரியில் தான் கண் முழிக்க நேரிடும் (தலை பாரத்தோடு!)
* வழியில் பழம் தவிர எதையும் வாங்கித் தின்னாதீர்கள். மேலே சொன்னபடி, வயிறு பிடுங்க வாய்ப்பு அதிகம் !
* ஓசிப் பத்திரிகைகள் சகபயணிகளிடம் கிடைக்கும். தாராளமாக வாங்கிப் படியுங்கள் !
* இரயிலில் இருக்கும் டுபாக்கூர் மின்விசிறியை ஓட வைக்க, உங்கள் சீப்பு உபயோகமாக இருக்கும். அது ஏற்படுத்தும் இரைச்சல் கண்டு பயப்படாதீர்கள் !
* கீழ் பெர்த்தில் ஜன்னலை திறந்து வைத்து படுத்திருந்தால், உங்கள் செயின், வாட்ச், ஆகியவற்றுக்கு உத்திரவாதம் கிடையாது.
இறங்குமிடம்
* நீங்கள் இறங்க வேண்டிய இரயில் நிலையம் எப்போது வரும் என்று TTE யிடமோ சகபயணியிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
* பின்னிரவில் தான் நீங்கள் இறங்குமிடம் வருமானால், உஷாராக பார்த்து இறங்கவும். இல்லையெனில், ஏதோ ஒரு ஊருக்கு சென்று பாயை பிராண்ட நேரிடும் !
* டிக்கெட்டை காணவில்லையெனில், கூட்டத்தோடு கூட்டமாக நைசாக நழுவி விடுங்கள். இல்லையெனில், டிராக்கை தாண்டி ஏதாவது குறுக்கு வழியில் வெளியே ஓடி விடுங்கள் !
* நிலையத்தின் வெளியே, மறுபடியும், ஏதோ ஓர் ஆட்டோக்காரருடன் தகராறு செய்து, நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லுங்கள் !
இந்த இடத்தில் உங்கள் முதல் இரயில் பயணம் இனிதே நிறைவடைந்தது... வருக வருக...
* நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான இன்னொரு விஷயம் இருக்கிறது.... இரயில் நாற்றம் எல்லாம் போக குளித்த பிறகு, இந்த பதிவிற்கு மறக்காமல் ஒட்டு போடுங்கள்....
© பாலா
இதனை பகுதியாகவோ முழுதாகவோ பயன் படுத்த நினைப்போர் செய்ய வேண்டியது :
அ) உங்கள் பயன்பாட்டில் நன்றி என்று பாலா பதிவிற்கு இணைப்பு கொடுங்கள்
ஆ) இந்த பதிவிற்கு ஓட்டு போடுங்கள்.
மீறுபவர்களுக்கு இரயில் பிரயாணச் சூட்டினால் மலச்சிக்கல் வரக்கடவது...
டிஸ்க்ளெய்மர்: இந்த கட்டுரை ஒரு வழிகாட்டி(அல்லது கையேடு) மட்டுமே... இதனால் ஏற்படும் பண, மன உளைச்சல்களுக்கு நான் பொறுப்பல்ல.